விக்கிரவாண்டி, மார்ச் 11: விக்கிரவாண்டி அருகே போதையில் தம்பி மனைவியை கோடரியால் வெட்ட முயன்ற அண்ணனை வெட்டி கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார். விக்கிரவாண்டி அடுத்த வடக்குச்சிபாளையத்தை சேர்ந்த பரமசிவம் மகன் செல்வகுமார்(38), டிராவல்ஸ் நடத்தி வந்தார். இவரது தம்பி செல்வராஜ்(33). இந்நிலையில் செல்வகுமார் தினமும் குடித்துவிட்டு வந்து தனது அம்மா ஜெயா, தம்பி மனைவி கலைவாணி ஆகியோருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அதேபோல நேற்று முன்தினம் செல்வகுமாரும், செல்வராஜும் போதையில் இருந்துள்ளனர்.
இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட தகராறில் செல்வராஜ் மனைவி கலைவாணி தடுக்க வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார், தனது தம்பி மனைவியை கோடரியால் வெட்ட முயன்றுள்ளார். உடனே செல்வகுமார் வைத்திருந்த கோடரியை செல்வராஜ் பிடுங்கி அவரது தலையில் வெட்டியுள்ளார். இதில் மயங்கி விழுந்த செல்வகுமாரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு செல்வகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறி்த்து விக்கிரவாண்டி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் டிஎஸ்பி சரவணன், இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் ஆகியோர் நேற்று செல்வராஜை வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பிரேத பரிசோதனையில் சிக்கிய தம்பி…
அண்ணன் செல்வகுமாரை தம்பி செல்வராஜ் கோடரியால் வெட்டி கொலை செய்துவிட்டு, அதனை அண்ணன் மது போதையில் மாடியில் இருந்து தவறி விழுந்துவிட்டார் என மருத்துவரிடம் கூறியுள்ளனர். மருத்துவர்கள் செல்வகுமார் உடலை பிரேத பரிசோதனை செய்த பின் அவர் முன்னரே இறந்து விட்டார் என கூறியுள்ளனர். அதன் பின்பு அண்ணன் செல்வகுமாரின் உடற்கூறாய்வில் அவரது பின்னந்தலையில் ஆழமான வெட்டு காயங்கள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் சந்தேகம் அடைந்து போலீசாரிடம் தகவல் தெரிவித்ததையடுத்து மீண்டும் விக்கிரவாண்டி போலீசார் செல்வராஜிடம் தீவிர விசாரணை செய்தனர். இதில் மது போதையில் தனது மனைவியை கோடரியால் வெட்ட வந்த என்னுடைய அண்ணனை நான்தான் வெட்டி கொலை செய்தேன் என செல்வராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் பிறகு தம்பி செல்வராஜை விக்கிரவாண்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
