×

விவசாயிகளிடம் அபராதம் வசூலிப்பதாக புகார் போக்குவரத்து போலீசாரிடம் பாமகவினர் வாக்குவாதம்

விருத்தாசலம், மார்ச் 10: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினமும் அன்றாட தேவைகளுக்காக விருத்தாசலம் வந்து செல்கின்றனர். எப்போதும் பரபரப்பாகவே காணப்படும் விருத்தாசலம் நகரத்தில், காலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு வாகன தணிக்கைகளில் ஈடுபடும் போது, விருத்தாசலம் ஜங்ஷன் சாலை, கடைவீதி, பாலக்கரை போன்ற இடங்களில் அதிக அளவு விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை உழவர் சந்தை மற்றும் காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லும்போதும், அவசர பணிகளுக்கு செல்லும்போதும் போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை சோதனை நடத்துவதால் சிரமம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

இந்நிலையில் நேற்று விவசாயிகள் சிலர் வாகனத்தை போலீசார் சோதனை செய்யும் போது, அங்கு வந்த பாமகவினர் போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சோதனை என்ற பெயரில் வாகனங்களை பிடித்து கொண்டு அவர்களிடம் பணம் வசூலிப்பதாகவும், மேலும் இதனால் தொழிலாளிகள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்ல முடியவில்லை எனவும் தெரிவித்தனர். அப்போது காலை நேரத்தில் வாகன சோதனை நடத்துவதை நிறுத்தி பொதுமக்கள் நெரிசல்கள் இல்லாத பகுதியில் வாகன சோதனை நடத்த வேண்டும். அதுபோல அப்பாவி விவசாயிகள், கூலி தொழிலாளிகள், கட்டிட வேலைகளுக்கு செல்லும் தொழிலாளிகள் என ஏழை, எளிய மக்களை இந்த சோதனைக்குள் ஈடுபடுத்தப்படுவதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி இதுபோன்று மீண்டும் நடக்காது என தெரிவித்ததன் பேரில், அவர்கள் அங்கிருந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : PMK ,Virudhachalam ,Cuddalore district ,
× RELATED ஆரோவில் நிலமோசடியை தடுத்து...