பெரும்புதூர், ஜன. 20: காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இரும்பேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியில் பாலிமர் மற்றும் ரெக்சின் பொருட்கள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சத்தில் கலையரங்கம் மற்றும் தரைத்தளம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன், தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிவா ஆகியோர் கலந்துகொண்டு கலையரங்கத்தை திறந்து வைத்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
இந்த நிகழ்ச்சியில், வெங்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உலகநாதன், தனியார் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் பாபு, மேலாளர் சுப்பையா, ஊராட்சிமன்ற துணைத்தலைவர் தமிழ்செல்வி ரவிச்சந்திரன், வார்டு உறுப்பினர்கள் எத்திராஜ், முருகன், ஆசிரியர் ஆக்சிலியா, மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
