* முக்கிய சாலைகள், சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்
* பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணி வகுத்து நின்ற வாகனங்கள்
சென்னை: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் ரயில், பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. வாகனங்கள் அதிக அளவில் வருவதால் முக்கிய சாலைகள், சுங்கச்சாவடிகளில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காகசென்னையில் வசிப்போர் கடந்த 9ம் தேதி(வெள்ளிக்கிழமை) மாலை முதல் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கினர். 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை ரயில், பஸ், கார், விமானம் என்று சென்னையில் இருந்து மட்டும் சுமார் 16 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
தற்போது பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து இன்று(திங்கட்கிழமை) முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்பட உள்ளன. அதே போல அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்பட உள்ளன. இதனால், விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். நேற்று கடைசி நாள் என்பதால் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் பெரும்பாலானவர்கள் ஒரே நேரத்தில் சென்னைக்கு திரும்பினர். இதனால், அனைத்து ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் பயணிகள் வெள்ளத்தில் திக்கு முக்காடிய காட்சியை காண முடிந்தது.
சென்னைக்கு வரும் அனைத்து முக்கிய சாலைகளிலும், சுங்கச்சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்தபடி சென்றன. சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து வந்ததால், அங்கும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்ற காட்சியை காண முடிந்தது. பிற மாவட்டங்களில் இருந்து சென்னையை நோக்கி புறப்பட்டவர்கள் இன்று அதிகாலை முதல் சென்னை நோக்கி வரக்கூடும். இதனால், இன்று அதிகாலை முதல் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்காக பல்வேறு முன்எச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
* ஆம்னி பஸ்சில் எகிறிய கட்டணம்
பொங்கல் பண்டிகைக்காக தங்கள் சொந்த ஊர் சென்ற மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பும் நிலையில் ஆம்னி பேருந்து கட்டண உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பழைய கட்டணம் புதிய கட்டணம்
தூத்துக்குடி-சென்னை ரூ.2,500 ரூ.3,500 வரை
நெல்லை-சென்னை ரூ.3,500 ரூ.4,000
நாகர்கோவில்-சென்னை ரூ.3,500 ரூ.5,000
மதுரை-சென்னை ரூ.2,700 ரூ.4,500
பொங்கல் கழித்து மீண்டும் சென்னை திரும்பும் நிலையில், பயணச் செலவு எதிர்பாராத அளவில் அதிகமாகி விட்டது. இது ஏமாற்றமளிக்கிறது என பயணிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
