சென்னை: ஓசூர் நகரம் தொழில் வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வருகிறது. இங்கு சர்வதேச விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதில் இருந்து கொங்கு மண்டலத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இடம் தேர்வு, இந்திய விமான நிலையத்தின் கள ஆய்வு, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் சிக்கல் ஏற்படாத பகுதி, ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் அனுமதி என அடுத்தடுத்து தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ஓசூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான வான்வெளி அனுமதியை வழங்க முடியாது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓசூரைச் சுற்றியுள்ள வான்பகுதி ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
