×

உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி: முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு

சென்னை: தமிழக அமைச்சா் துரைமுருகன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வயது மூப்பால் வரும் பிரச்னைகளுக்காக, அவ்வப்போது மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை துரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்டாா். அவரது உடல்நிலையை பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைகளை மருத்துவா்கள் அளித்து வருகின்றனா்.

வீட்டில் இருந்த போது திடீரென உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் அதிகமாக இருந்ததால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நிலை எவ்வாறு இருக்கிறது என்பதற்கு மருத்துவர்கள் தொடர்ந்து பரிசோதனை செய்து வருவதாகவும், தற்போதைய நிலையில் அவர் நலமுடன் இருக்கிறார் என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று துரைமுருகனை சந்தித்து நலம் விசாரித்தாா். தொடா்ந்து, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தார்.

Tags : Minister ,Duraimurugan ,Chief Minister MK Stalin ,Chennai ,Tamil Nadu ,Apollo Hospital ,Chief Minister ,MK Stalin ,DMK ,General Secretary ,Minister Duraimurugan ,
× RELATED பொங்கல் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுத்து நிற்கும் வாகனங்கள் !