பரமக்குடி: பரமக்குடியில் பெண் போலீசார் பயன்படுத்திய கழிவறையில், செல்போனை மறைத்து வைத்து ஆபாசமாக வீடியோ பதிவு செய்த புகாரின் பேரில் எஸ்எஸ்ஐ கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல்சேகரன் மணிமண்டபம் திறப்பு விழா நேற்றுமுன்தினம் நடந்தது. இதற்காக திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் பாதுகாப்பு பணிக்கு வந்திருந்தனர். மணி நகர் பகுதியில் உள்ள புறநகர் காவல் சோதனைச் சாவடியில் பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு, பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் வாகன ரோந்து பிரிவில் பணியாற்றும் எஸ்எஸ்ஐ முத்துப்பாண்டி (58) பணியில் இருந்துள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் சோதனைச்சாவடி மையத்தில் உள்ள கழிவறையை பயன்படுத்தி வந்துள்ளனர். மூன்று பெண் போலீசார் கழிவறைக்கு சென்று வந்த நிலையில், நான்காவதாக சென்றவர் வாஷ்பேஸின் கீழ் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் கருப்பு கலரில் ஒரு பாலித்தீன் கவர் இருப்பதைப் பார்த்துள்ளார். சந்தேகம் அடைந்த பெண் போலீஸ், அந்தக் கவரை எடுத்துப் பார்த்த போது பாலித்தீன் கவரில் ஓட்டை இடப்பட்டு, உள்ளே ஒரு செல்போன் இருந்தது. அந்த செல்போனில் வீடியோ பதிவாகி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, செல்போனை எடுத்து பாதுகாப்பு உயர் அதிகாரியிடம் கொடுத்தார்.
இதையடுத்து அந்த போன் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டது. செல்போனை ஆய்வு செய்தபோது, அது பரமக்குடி எஸ்எஸ்ஐ முத்துப்பாண்டியின் செல்போன் என்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து பெண் போலீசார் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டி நேற்று கைது செய்யப்பட்டார். கைதான முத்துப்பாண்டி ஏற்கனவே பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றிய போது, பிறந்தநாள் விழாவின் போது, சக பெண் போலீசாருக்கு கேக் ஊட்டியது சம்பந்தமாக இடமாற்றம் செய்யப்பட்டார். 4 ஆண்டுக்கு முன்பு பரமக்குடி போலீஸ் நிலையத்திற்கு வந்த அவர், தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளார்.
