கொலை முயற்சி குற்றச்சாட்டில் இருந்து நடிகை விடுவிப்பு: வீடுபுகுந்த கொள்ளையன் மீது வழக்கு

சியோல்: தென்கொரியாவில் கொலை முயற்சி குற்றச்சாட்டில் இருந்து பிரபல நடிகை அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளார். தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல நடிகை நானா வீட்டில் கடந்த நவம்பர் 15ம் தேதி ஆயுதங்களுடன் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார். அப்போது நடிகையும் அவரது தாயாரும் துணிச்சலாகப் போராடி அந்த நபரைப் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த கொள்ளையன், நடிகை நானா தன்னைத் தாக்கியதாகவும், கொல்ல முயன்றதாகவும் கூறி அவர் மீது எதிர் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்காப்புக்காகப் போராடிய நடிகை மீதே கொலை முயற்சி வழக்கு பதியப்படலாம் என்ற சூழல் நிலவியதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், இந்த புகாரை விசாரித்த குரி நகரப் போலீசார், சிசிடிவி காட்சிகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். இதில் நடிகை மேற்கொண்டது தற்காப்பு நடவடிக்கை மட்டுமே என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று நடிகை நானா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்த போலீசார், வழக்கை முடித்து வைத்தனர்.

கொள்ளையன் மீது வழிப்பறி மற்றும் காயம் ஏற்படுத்தியதற்கான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகையின் தரப்பில், ‘பிரபலமாக இருப்பதைப் பயன்படுத்திப் பணம் பறிக்கும் நோக்கில் இந்த பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு எதிராகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: