அறிவியல் பல்கலைக்கழகங்களின் தரவரிசை ஹார்வர்ட்டை பின்னுக்கு தள்ளிய சீனா

 

வாஷிங்டன்: உலகில் உள்ள அறிவியல் பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில், முதல் 2 இடங்களை சீன பல்கலைக்கழகங்கள் பெற்றுள்ளன. அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் 3வது இடத்தக்கு தள்ளப்பட்டுள்ளது.

2025ம் ஆண்டுக்கான அறிவியல் பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலை நெதர்லாந்தில் உள்ள லைடன் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளுக்கான மையம் வௌியிட்டுள்ளது. உலகில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் அறிவியல் செயல்திறனை ஆய்வு செய்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த மையம் கடந்த 2009 முதல் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில், அமெரிக்காவில் உள்ள உலக புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளது. முதல் மற்றும் இரண்டாவது இடங்களை சீனாவின் ஜெஜியாங் மற்றும் ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகங்கள் பிடித்துள்ளன. மூன்றாவது இடத்தைத் தவிர, முதல் ஒன்பது இடங்களை சீனப் பல்கலைக்கழகங்களே பெற்றுள்ளன. 10வது இடத்தில் கனடாவின் டெராண்டோ பல்கலைக்கழகம் உள்ளது.

ஆரம்பகால தரவரிசை பட்டியலில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களே ஆதிக்கம் செலுத்தின. பெரும்பாலும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இரண்டாவது இடத்தை கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகமும், மூன்றாவது இடத்தை மிச்சிகன் பல்கலைக்கழகமும் பிடித்தன.

மேலும், 2009 காலகட்டத்தில் முதல் 10 இடங்களில் இருந்த அமெரிக்காவின் ஆறு முக்கிய பல்கலைக்கழகங்களில் ஹார்வர்ட்டை தவிர வேறு எந்த பல்கலைக்கழகமும் இப்போது முதல் 15 இடங்களில் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: