×

தி.மலையில் திருவூடல் திருவிழா கோலாகலம்; அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் பவனி: நந்தி, சூரியனுக்கு காட்சி கொடுத்தனர்

 

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற திருவூடல் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. மாட்டுபொங்கலையொட்டி நந்தி, சூரியபகவானுக்கு காட்சி கொடுத்த அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் உற்சவங்கள் ஒவ்வொன்றும் தனி சிறப்பு வாய்ந்தது. அதில் மிகவும் பிரசித்தி பெற்றது திருவூடல் விழாவும், மறுவூடல் திருவிழாவும். இது அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் இடையே நடக்கும் ஊடலையும், அதைத்தொடர்ந்து அவர்களின் சமாதானத்தையும், ஒன்றிணைப்பையும் விளக்கும் விதமாக நடைபெறுகிறது. அதன்படி இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதேபோல் மாட்டு பொங்கலையொட்டி 5ம் பிரகாரத்தில் உள்ள பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மலர்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் தின்பண்டங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் அண்ணாமலையார் சமேத பிரியாவிடை, உண்ணாமுலையம்மன் சிறப்பு அலங்காரத்தில் நந்திபகவானுக்கு காட்சி கொடுத்தனர். பின்னர் ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டி வாசல் வழியாக வந்து சூரிய பகவானுக்கு காட்சி கொடுத்தனர். அப்போது அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ என பக்தி முழக்கமிட்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதையடுத்து உற்சவ மூர்த்திகள் மாட வீதியில் 3முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது மாட வீதியில் ஆங்காங்கே சுவாதிக்கு மண்டகபடி செய்தனர். இதைதொடர்ந்து இன்று மாலை திருவூடல் திருவிழாவில் திருவூடல் விழா நடைபெறுகிறது. அப்போது அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும் ஊடல்கொள்ளும் நிகழ்ச்சி நடத்தப்படும்.

ஊடல் அதிகமானதும் உண்ணாமுலையம்மன் கோயிலுக்குள் சென்று 2ம் பிரகாரத்தில் உள்ள தனது சன்னிதியின் கதவுகளை மூடிக்கொள்வார். இதையடுத்து அம்மனை, அண்ணாமலையார் சமாதானம் செய்யும் நிகழ்வுநடைபெறும். அவர் சமாதானம் ஆகாததால் அண்ணாமலையார் குமரன்கோயிலில் சென்று தங்குவார். மறுநாள் அதிகாலை அண்ணாமலையாருக்கு பால், தயிர், சந்தனம், குங்குமம், விபூதி, இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து அண்ணாமலையார் கிரிவலம் செல்வார். இந்த கிரிவலம் மிகவும் விசேஷமானது. ஆண்டுக்கு 2 தடவை மட்டுமே அண்ணாமலையார், தன்னைதானே சுற்றிக்கொள்ளும் வகையில் கிரிவலம் நடைபெறும். அதில் ஒன்று கார்த்திகை தீபத்திற்கு மறுநாள், மற்றொன்று திருவூடல் திருவிழா அன்று நடைபெறும்.

இதையடுத்து நாளை மாலை மறுவூடல் விழா நடைபெறும். அப்போது அண்ணாமலையார் கிரிவலம் முடித்து கோயிலுக்கு சென்று உண்ணாமுலையம்மனை சமரசம் செய்து ஊடலை தீர்ப்பார். இதையடுத்து உண்ணாமுலையம்மன் சன்னதியின் தாழ்பாளை திறந்து அண்ணாமலையாரை சன்னதிக்குள் அனுமதிப்பார். இறுதியாக அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும் ஒரு சேர பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.
பிரசித்தி பெற்ற இந்த திருவூடல் திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் குவிந்துள்ளனர். கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய கூட்டம் அலை மோதுகிறது. சுமார் 4 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 

Tags : Thiruvudal festival ,Kolakalam ,Annamalaiyar ,Unnamulayamman ,Bhavani ,Nandi ,Thiruvannamalai ,Thiruvananthal festival ,Annamalayaar ,Unnamulayamaman ,Matupongalaioti ,Sunyapaghavan ,Annamalaiyar Temple ,Tiruvannamalai ,
× RELATED பொங்கல் பண்டிகை உற்சாகத்தை தொடர்ந்து...