×

கடும் எதிர்ப்புகளுக்கிடையில் டிரம்பிடம் நோபல் பரிசை வழங்கினார் மரியா மச்சாடோ

 

வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப், தான் 10க்கும் மேற்பட்ட போர்களை நிறுத்தி உள்ளதாகவும் அதனால் 2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்க வேண்டும் என்று வெளிப்படையாக கூறினார். உலக வரலாற்றில் தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று இதுவரை யாரும் வெளிப்படையாக கேட்டதில்லை. ஆனால், முதல்முறையாக டிரம்ப் கேட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில், அமைதிக்கான நோபல் பரிசு வெனிசூலா நாட்டின் எதிர்க்கட்சி தலைவரும் தீவிர வலதுசாரி ஆதாரவாளருமான மரியா கொரினா மச்சாடோவுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. இவர், அமெரிக்காவின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட உடன், அந்த விருதை டிரம்புக்கு சமர்பிப்பதாக அவர் உடனடியாக அறிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும், தனக்கு அந்த விருது வழங்கவில்லை என்று டிரம்ப் அவ்வபோது தனது ஆதங்கத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார்.

இந்தநிலையில், வெனிசூலாவில் அத்துமீறி நுழைந்து அந்த நாட்டின் அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து நாடு கடத்தியது அமெரிக்க ராணுவம். இதனை தொடர்ந்து, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், நான், இதுவரை 10க்கும் மேற்பட்ட போர்களை நிறுத்தி அமைதியை ஏற்படுத்தி உள்ளேன். எனக்கு அந்த விருதை வழங்குவதில் என்ன பிரச்னை,’என்று கேட்டார். அதேநேரம் நோபல் பரிசை ஒருவருக்கு வழங்கினால் அதை மாற்ற முடியாது என நோபல் குழு ஏற்கனவே விளக்கமளித்திருந்தது. இதுதொடர்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில்,‘ஒரு நோபல் பரிசை ரத்து செய்யவோ, பகிரவோ அல்லது மற்றவர்களுக்குத் தரவோ முடியாது. ஒருமுறை அறிவிக்கப்பட்டால் அதுவே நிரந்தரமானது,’என்று கூறியிருந்தது.

இந்தநிலையில், அமெரிக்கா சென்ற மச்சாடோ, அதிபர் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் வைத்து சந்தித்தார். அப்போது, தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை டிரம்பிடம் அவர் வழங்கினார். இதை வெள்ளை மாளிகை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். நோபல் பரிசு இப்போது டிரம்ப் வசமே இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனை உறுதி செய்த டிரம்ப், நோபல் பரிசை வழங்கிய மச்சோடாவுக்கு நன்றி தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

 

Tags : Maria Machado ,Trump ,Washington ,President ,United States ,
× RELATED தனக்கு கொடுக்கப்பட்ட நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கினார் மச்சாடோ