மங்களூரு: சட்டவிரோத வங்கதேச குடியேறி என்ற சந்தேகத்தில் ஜார்க்கண்ட் வாலிபர் மீது தாக்குதல் நடத்தியதால் மங்களூருவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மங்களூருவில் ஜார்க்கண்ட் வாலிபர் ஒருவர் 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவரை வழிமறித்த சிலர் நீ வங்க தேசத்தில் இருந்துதானே வந்துள்ளாய் என்று கேட்டு மிரட்டியுள்ளனர்.
நீ இந்தியன் என்றால் அதற்கான ஆவணங்களை கொடு என்று கட்டாயப்படுத்தி உள்ளனர். அப்போது தான் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இந்திய குடிமகன் என்று அவர் பலமுறை கூறியும் கேட்காத கும்பல் அவரை தாக்கியுள்ளது. இதனால் அந்த வாலிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. இதையடுத்து உள்ளூர் பெண் ஒருவர் தலையிட்டு அந்த வாலிபரை மீட்பதற்கு உதவி செய்துள்ளார்.
தாக்கப்பட்ட பயத்தில் ஜார்கண்ட் வாலிபர் உடனடியாக போலீசில் புகார் அளிக்கவில்லை. ஆனால் உள்ளூர் தலைவர்கள் இப்பிரச்னை குறித்து கவலை தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதால் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
