×

ஜனநாயகன் பட விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சென்சார் போர்டு கேவியட் மனு

புதுடெல்லி: நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் முதலில் 2025ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் 2026 பொங்கல் வெளியீடாக படம் வர இருந்தது. குறிப்பாக நேற்று முன்தினம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான முன்பதிவும் சில இடங்களில் தொடங்கின. ஆனால் படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் சான்று கிடைப்பதற்கு தாமதமானதால் படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்று சென்சார்போர்டுக்கு உத்தரவிட்டார். தனிநீதிபதி உத்தரவுக்கு எதிராக உடனடியாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட அமர்வு, ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பிறப்பித்த தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர்.

இதற்கு எதிராக பட தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில்,”ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு வழக்கில் எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்தவித உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Censor Board ,Supreme Court ,New Delhi ,Vijay ,Diwali ,Pongal ,
× RELATED இருதரப்பு உறவை விரிவுபடுத்த முக்கிய...