அகமதாபாத்: பிரதமர் மோடி, ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடந்தது. இதில் பாதுகாப்பு, வர்த்தகம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து முக்கிய துறைகளிலும் இருதரப்பு உறவை மேலும் விரிவுபடுத்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் 2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெர்மனி அதிபராக மெர்ஸ் பதவியேற்ற பிறகு ஆசிய நாடுகளுக்கு முதல் முறையாக வந்துள்ளார். இதில் முதல் பயணமாக அவர் இந்தியாவுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், ஐரோப்பாவின் முக்கிய நாடான ஜெர்மனி அதிபர் மெர்சின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் ஜெர்மனி அதிபர் மெர்ஸ் தனது முதல் நிகழ்ச்சியாக சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார். அங்கு அவரை பிரதமர் மோடி வரவேற்றார். இரு தலைவர்களும் அங்கு மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினர். சுதந்திர போராட்ட காலத்தில் மகாத்மா காந்தியும், அவரது மனைவி கஸ்தூரிபாவும் வாழ்ந்த அறையை பார்வையிட்டனர். இதையடுத்து, காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திர் மாநாட்டு மையத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் பிரதமர் மோடி-ஜெர்மனி அதிபர் மெர்சுடன் இருநாட்டு அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட ஊடக அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து துறைகளிலும் இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. குறிப்பாக, கல்வித்துறையில் உறவுகளை விரிவுபடுத்த விரிவான செயல்திட்டம் வகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது உயர்கல்வித் துறையில் நமது கூட்டாண்மைக்கு புதிய திசையை வழங்கும்.
ஜெர்மனி பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களை திறக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் மோதல், காசா நிலைமை மற்றும் பிற அழுத்தமான உலகளாவிய சவால்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அனைத்துப் பிரச்னைகள் மற்றும் சர்ச்சைகளுக்கும் அமைதியான தீர்வையே இந்தியா எப்போதும் ஆதரித்து வருகிறது. இந்த திசையில் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவளிக்கிறது.
தீவிரவாதம் மனிதகுலம் முழுவதற்கும் கடுமையான அச்சுறுத்தல் என்பதை நானும் அதிபர் மெர்சும் ஒப்புக் கொண்டுள்ளோம். இதற்கு எதிராக இந்தியாவும், ஜெர்மனியும் ஒன்றுபட்டு நின்று, முழு உறுதியுடன் போராட்டத்தை தொடரும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி-ஜெர்மனி அதிபர் மெர்ஸ் இருவரும் இந்தியா-ஜெர்மனி சிஇஓக்கள் மன்றத்தில் உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘‘ஆசியாவிற்கான தனது முதல் பயணத்திற்கு இந்தியாவை அதிபர் மெர்ஸ் தேர்வு செய்ததன் மூலம் இந்தியாவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் பிரதிபலிக்கிறது. இது உயர்மட்ட நம்பிக்கையை காட்டுகிறது. இதன் மூலம் எங்களின் தடையற்ற பொருளாதார ஒத்துழைப்பை, எல்லைகளற்றதாக மாற்ற நாங்கள் முடிவு செய்துள்ளோம். அனைத்து முக்கிய துறைகளிலும் ஆழமான ஒத்துழைப்பு இருக்கும்.
ஜெர்மனியின் துல்லியமும் புதுமையும் இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் வேகமான பொருளாதார வளர்ச்சியுடன் இணையுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யலாம், உள்நாட்டுத் தேவையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம், எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி ஏற்றுமதி செய்யலாம்’’ என இந்தியாவில் முதலீடு செய்ய தொழில்துறையினருக்கு அழைப்பு விடுத்தார். இன்று பெங்களூரு செல்லும் ஜெர்மனி அதிபர் மெர்ஸ் தொழில்துறை சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

* பட்டம் பறக்க விட்டு மகிழ்ந்த தலைவர்கள்
சபர்மதி ஆசிரமத்தில் அஞ்சலி செலுத்திய பின், பிரதமர் மோடி, ஜெர்மனி அதிபர் மெர்ஸ் இருவரும் சபர்மதி ஆற்றங்கரையோரம் நடந்த சர்வதேச பட்டம் விடும் திருவிழாவை தொடங்கி வைத்தனர். அப்போது இரு நாட்டு தேசிய கொடிகள் அச்சிடப்பட்ட பட்டத்தை இரு தலைவர்கள் பறக்க விட்டு மகிழ்ந்தனர். இந்தியா-ஜெர்மனி நாடுகளின் நட்புறவை உணர்த்தும் வாசகங்கள் அடங்கிய பட்டங்கள், இந்து கடவுள்களின் பட்டங்கள் பறக்க விடப்பட்டன. இந்த திருவிழாவில் 50 நாடுகளைச் சேர்ந்த 135 பட்டம் விடும் நிபுணர்கள் பங்கேற்று 1000க்கும் மேற்பட்ட விதவிதமான பட்டங்களை பறக்கவிட உள்ளனர்.
