- நாகூர் தர்கா
- நாகப்பட்டினம்
- தர்கா
- அறங்காவலர்
- முஹம்மது மது காஜி உசைன் சாஹிப்
- மாவட்டம்
- கலெக்டர்
- நாகூர் பிரபு தர்கா
- நாகூர்
- நாகப்பட்டினம் மாவட்டம்...
நாகப்பட்டினம், ஜன.12: நாகூர் அருகே உள்ள தனியார் துறைமுகத்தில் நிலக்கரி கையாள்வதால் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா மாசடைவதை தடுக்க வேண்டும் என தர்கா மேனேஜிங் டிரஸ்ட்டி செய்யதுமுகம்மதுகாஜிஉசேன்சாகிப் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
இது குறித்து நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் அருகே தனியார் துறைமுகத்தில் பிரதானமாக நிலக்கரி கையாளப்பட்டு வருகிறது. அதில் நிலக்கரி இருப்பு வைக்கப்பட்டு, பின்னர் வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதனால் நிலக்கரி கையாளப்படும் சமயங்களிலும், அதிக அளவில் இருப்பு வைக்கப்படும் பொழுதும் காற்று வீசும் போக்கினால் அதிலிருந்து காற்றில் கலக்கும் நிலக்கரித் துகள்களால் அருகில் இருக்கும் புனித ஸ்தலமான நாகூர் தர்காவிற்கு வருகை புரியும் ஏராளமான வெளியூர் யாத்ரீகர்கள், உள்ளுர் மற்றும் அருகில் வசிக்கும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் நுரையீரல் சம்பந்தமான தொந்தரவுகளும், சளி, காய்ச்சல் தொற்றுகளால் பாதிப்படைகின்றனர். மேலும் நாகூர் முழுவதும் நிலக்கரி துகள்களால் பாதிப்படைகிறது. மேலும் தர்கா உட்புறம் சலவை கற்கள் பதிக்கப்பட்ட மண்டபங்கள், தூண்கள் மற்றும் மினராக்களின் வெள்ளை நிற வண்ணம் மாறி கருமையடைகிறது. நாகூரில் அமைந்துள்ள குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டிடங்கள், கல்விக் கூடங்கள் மற்றும் மருத்துவமனை பகுதிகளும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனால் நாகூர் அருகே உள்ள தனியார் துறைமுகத்திற்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் நடத்தக்கூடிய சூழ்நிலை உள்ளது.
நாகூர் தர்காவிற்கு இது தொடர்பாக பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே நிலக்கரித் துகள்களால் மாசு ஏற்படும் அபாயத்தையும், அதனால் மக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளையும் கருத்தில் கொண்டு நிலக்கரித் துகள்கள் பொதுமக்களை பாதிக்காத வண்ணம் மாசு பரவிடாமல் தவிர்த்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என நாகூர் தர்கா நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்வதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
