×

நெல்லை மாவட்டத்தில் 5 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்

நெல்லை, ஜன.9: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.3 ஆயிரம் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுநீள கரும்பு மற்றும் வேட்டி, சேலை வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை நேற்று காலை துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து நெல்லை வண்ணார்பேட்டைபைபாஸ் சாலையில் உள்ள டிவிஎஸ் ரேஷன் கடையில் நடந்த விழாவில் கலெக்டர் சுகுமார், அப்துல்வஹாப் எம்எல்ஏ., நெல்லை மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் கிரகாம் பெல், நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் கேஆர் ராஜூ ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுநீள கரும்பு மற்றும் வேட்டி, சேலை ஆகியவை வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் 796 ரேசன் கடைகள் மூலம் மொத்தம் 5 லட்சத்து ஆயிரத்து 769 லட்சம் அரிசி ரேசன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் அன்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். நிகழ்ச்சியில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய தலைவர் விஜிலா சத்தியானந்த், மாவட்ட வருவாய் அலுவலர் துரை, தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், தச்சை மண்டல சேர்மன் ரேவதி பிரபு, கவுன்சிலர் கந்தன், களக்காடு நகராட்சி துணைத்தலைவர் பிசி ராஜன், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.

பொதுமக்கள் உற்சாகம்
பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் கடைகளில் பொதுமக்கள் உற்சாகமாக பெற்றுச் சென்றனர். ரொக்கப் பணம். சர்க்கரை, அரிசி, முழு நீள கரும்பு, வேஷ்டி, சேலை என கை நிறைய பொருட்களுடன் பொதுமக்கள் பரிசுத் தொகுப்பை பெற்றுச் சென்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : Speaker ,Appavu ,Pongal ,Nellai district ,Nellai ,Tamil festival ,Tamil Nadu ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரும்படி சப்.கலெக்டரிடம் கோரிக்கை