தாம்பரம், மார்ச் 13: அடையாறு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மற்றும் அடையாறு பகுதியை சேர்ந்த ரகுபதி ஆகியோர், மறைமலைநகர் அடுத்த கருநிலம் மற்றும் அனுமந்தபுரம் கிராமங்களில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் உள்ளதாகவும், நில உரிமையாளர்களிடமிருந்து கிரயம் பெற்றுத் தருவதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 25 மற்றும் 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆகிய தேதிகளில் 2 ஒப்பந்தம் செய்து, அதன்பேரில் ரூ.4.62 கோடியை இருவரது வங்கி கணக்குகளில் பெற்றுள்ளனர். ஆனால், நிலத்தை கிரயம் செய்து கொடுக்காமல், பணத்தையும் கொடுக்காமலும் எமாற்றி வந்துள்ளனர்.
இதுகுறித்து தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் தொழிலதிபர் புகார் அளித்தார். அதன்பேரில், தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டத்தின் பேரில் தனிப்படை போலீசார் ஹரிகிருஷ்ணன் (56), ரகுபதி (59) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
