×

சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம்

சென்னை, மார்ச் 13: சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் நாளை பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொது விநியோக திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி மார்ச் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நாளை (14ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோக திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும். பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Public Distribution Scheme ,Chennai ,Distribution Scheme ,Redressal ,Food Distribution Department ,Public Distribution Scheme… ,
× RELATED வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ்...