நாகப்பட்டினம், ஜன.8: நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்தில் புதன்கிழமைதோறும் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் அச்சம் இன்றி புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல் அலுவலர் பாலகிருஷ்ணன் கூறினார். நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்தில் நேற்று எஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இக்குறைதீர் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களிடமிருந்து 7 மனுக்கள் பெறப்பட்டது.
மனுக்களை பெற்றுக்கொண்ட எஸ்பி பாலகிருஷ்ணன், மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறும் என்றும், இந்த முகாமில் மாவட்டத்தில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு தொடர்பான புகார்களை அச்சம் இன்றி தெரிவிக்கலாம் என்றும், அவ்வாறு புகார் தெரிவிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் எஸ்பி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
