நாகப்பட்டினம், ஜன. 7: நாகப்பட்டினம் அருகே வடக்குப் பொய்கை நல்லூர் சிவன் கோவில் தெருவிற்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். குடிசை வீடுகளை தொகுப்பு வீடுகளாக கட்டி தரவேண்டும். தரமான சாலை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் தங்களது ரேசன் அட்டைகளை ஒப்படைப்பதற்காக நாகப்பட்டினம் தாலுகா அலுவலகம் வந்தனர். தொடர்ந்து தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரி கோஷங்களை எழுப்பினர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அலுவலகம் உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த நாகப்பட்டினம் தாசில்தார் நீலாயதாட்சி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வீட்டு மனை பட்டா உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து வடக்குப் பொய்கை நல்லூர் சிவன் கோவில் தெரு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
