சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: அமெரிக்கப் படைகள் வெனிசுலா மீது மேற்கொண்ட வெளிப்படையான ராணுவ ஆக்கிரமிப்பும், ஒரு சுயாதீன நாட்டின் ஜனநாயகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரைப் பலவந்தமாகக் கைது செய்து நியூயார்கிற்கு கடத்திச் சென்றதும், நவீனக் காலத்தின் மிகக் கேவலமான பேராதிக்கச் செயல்களில் ஒன்றாகும். இது சட்டத்தின் பெயரில் நடத்தப்படும் கொள்ளை; ஜனநாயகத்தின் பெயரில் மேற்கொள்ளப்படும் கும்பல் அரசியல்.
ஒரு நாட்டின் எல்லைக்குள் நுழைந்து, அதன் அரசுத் தலைவரை கைது செய்து, உலகின் மிகப் பெரிய அதிகார மையங்களில் ஒன்றுக்கு இழுத்துச் செல்வது என்பது பன்னாட்டு சட்டம் சிதறடிக்கப்பட்டதற்கான அறிவிப்பே. “ஜனநாயகம்” என்ற வார்த்தையை ஆயுதமாக்கி, நாடுகளை உடைப்பதும், மக்களின் தீர்மான உரிமையை நசுக்குவதும் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பேராதிக்க அரசியலின் உண்மையான முகம். வெனிசுலாவின் எண்ணெய் வளங்களையும், அரசியல் சுயாதீனத்தையும் கைப்பற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆக்கிரமிப்பு, லத்தீன் அமெரிக்காவிற்கு மட்டுமல்ல உலகின் அனைத்துப் பலவீன நாடுகளுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும்.
அமெரிக்க அரசு உடனடியாக வெனிசுலா அதிபரை விடுவித்து, தனது படைகளைத் திரும்ப பெற வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையும், உலக நாடுகளும் இந்தப் பேராதிக்கக் குற்றத்திற்கு எதிராக மௌனம் காக்குமானால், அது உடந்தையாக மாறும். இன்று வெனிசுலா; நாளை வேறு எந்த நாடும் இதே பாணியில் ஆக்கிரமிக்கப்படும் அபாயத்தை டிரம்ப் நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆக்கிரமிப்பு அரசியலுக்கு தடையிடப்படாவிட்டால், உலகம் முழுவதும் சட்டம் அல்ல, துப்பாக்கியே ஆட்சி செய்யும்.
