×

3 ஆண்டுக்கு முன் வெளியான வீடியோ விவகாரம்: மூத்த நடிகையிடம் மன்னிப்பு கேட்ட ‘புஷ்பா’ பட நடிகை

 

ஐதராபாத்: தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூத்த நடிகை ராசி குறித்துத் தவறாகப் பேசியதற்காக நடிகை அனுசுயா பரத்வாஜ் தற்போது பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வரும் அனுசுயா பரத்வாஜ், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி நகைச்சுவை நாடக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது மூத்த நடிகை ராசியின் பெயரைப் பயன்படுத்தி இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் அவர் பேசிய வசனங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அந்த நிகழ்ச்சியில் உடல் கேலி செய்யும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இது குறித்து நடிகை ராசி ஏற்கனவே தனது அதிருப்தியை வெளியிட்டிருந்ததுடன், மன உளைச்சல் காரணமாகச் சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுப் பின்னர் குடும்பத்தினரின் ஆலோசனையின் பேரில் கைவிட்டார். இந்நிலையில், அந்தப் பழைய வீடியோ காட்சிகள் கடந்தாண்டு இறுதியில் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, புஷ்பா-2 படத்தில் நடித்துள்ள நடிகை அனுசுயா பரத்வாஜ், எக்ஸ் தளத்தில் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘சம்பவம் நடந்த போதே அந்த வசனங்களை எழுதிய வசனகர்த்தா மற்றும் இயக்குனர்களிடம் நான் கேள்வி கேட்டிருக்க வேண்டும்; ஆனால் அப்போது அதைத் தட்டிக் கேட்கும் தைரியம் எனக்கு இல்லை’ என்று வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், ‘கடந்த காலத்திற்குச் சென்று நடந்ததை மாற்ற முடியாது; ஆனால் தற்போது நான் பக்குவமடைந்து விட்டேன்; இதுபோன்ற தரம் தாழ்ந்த நிகழ்ச்சிகளிலிருந்து விலகியே இருக்கிறேன்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Hyderabad ,Anusuya Bhardwaj ,Raasi ,
× RELATED 1980களில் கிரிக்கெட் வீரருடனான உறவின்...