கோட்டா: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் திருடச் சென்ற இடத்தில், சமையலறை எக்ஸாஸ்ட் ஃபேன் (Exhaust Fan) துவாரத்தில் திருடன் ஒருவன் சிக்கிக்கொண்ட வினோத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறுதியில் போலீசாரே வந்து அவனை மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கோட்டாவின் போர்கேடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரதாப் நகர் பகுதியை சேர்ந்த சுபாஷ் குமார் ராவத் என்பவர், தனது மனைவியுடன் கோவிலுக்குச் சென்றுவிட்டு நள்ளிரவு ஒரு மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். அவர் தனது ஸ்கூட்டரை வீட்டிற்குள் நிறுத்தியபோது, ஸ்கூட்டரின் முகப்பு வெளிச்சம் சமையலறைப் பக்கம் விழுந்துள்ளது.
அப்போது, சமையலறைச் சுவரில் உள்ள எக்ஸாஸ்ட் ஃபேன் துவாரத்தில் பாதி உடல் உள்ளேயும், பாதி உடல் வெளியேயும் ஒரு வாலிபர் சிக்கித் தவிப்பதைக் கண்டு தம்பதியினர் அதிர்ச்சியடைந்தனர். தன்னை காப்பாற்றுமாறு அந்த திருடன் சத்தமிட்டுள்ளான்.
விசாரணையில், அந்தத் திருடன் ஒரு சொகுசு காரில் வந்து கைவரிசை காட்ட முயன்றது தெரியவந்தது. திருடன் பயன்படுத்திய காரில் ‘போலீஸ்’ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. சந்தேகம் வராமல் இருப்பதற்காகவும், போலீஸாரைப் போல நடித்து நோட்டமிடுவதற்காகவும் அவன் இந்த காரைப் பயன்படுத்தியது அம்பலமானது.
சுபாஷ் குமார் ராவத் சத்தமிட்டதும், வீட்டின் வெளியே கண்காணிப்பில் இருந்த அவனது கூட்டாளி காரை எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டான். ஆனால், துவாரத்தில் சிக்கிய திருடனால் நகர முடியவில்லை. அக்கம் பக்கத்தினர் கூடியபோது, “நான் மிகவும் ஆபத்தானவன், என் ஆட்கள் வெளியில் இருக்கிறார்கள், உங்களை கொன்றுவிடுவேன்” என அவன் மிரட்டலும் விடுத்துள்ளான்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போர்கேடா போலீசார், ஏணியைப் பயன்படுத்தி பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அந்த துவாரத்தில் சிக்கியிருந்த திருடனை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவனை உடனடியாகக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட திருடனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவனது கூட்டாளியைத் தேடும் பணியும், நகரில் நடந்த பிற திருட்டுச் சம்பவங்களில் இவர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
