ஈரோட்டில் தேசிய மஞ்சள் வாரிய மண்டல அலுவலகம் சட்ட விரோத மஞ்சள் விற்பனை தடுக்கப்படும்: ஒன்றிய வேளாண் அமைச்சர் உறுதி

 

ஈரோடு: சட்ட விரோத மஞ்சள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உறுதியளித்தார். ஈரோடு வில்லரசம்பட்டியில் பாஜ விவசாய அணி சார்பில் விவசாயிகள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்க ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஈரோடு வந்தார். அப்போது, செம்மாம்பாளையத்தில் உள்ள மஞ்சள் வணிக வளாகத்தில், ஏலத்தில் விடப்படும் மஞ்சள் ரகங்களை பார்வையிட்டார். தொடர்ந்து விவசாயிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, குளிர்சாதன கிடங்கு அமைக்க வேண்டும். ஈரோட்டில் தென் மண்டல மஞ்சள் வாரிய அலுவலகம் அமைக்க வேண்டும். தொழிலாளர்கள் பற்றாக்குறைக்க தீர்வு காண வேண்டும். 2020 முதல் இலங்கையில் மஞ்சள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதற்கு தளர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சள் அறுவடை, வேக வைக்கும் இயந்திரங்களை கிராமங்கள் தோறும் வழங்க வேண்டும். மஞ்சளுக்கு உரிய ஆதார விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்தனர்.

பின்னர் ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது: தேசிய மஞ்சள் வாரியத்தின் மண்டல அலுவலகம் ஈரோட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மஞ்சள் அறுவடை, காய வைத்தல், உலர வைத்தல் பணிக்கு புதிய இயந்திரங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். அரசு புதிய திட்டம் மூலம் மஞ்சள் மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி கொடுக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். இதன்மூலம், மஞ்சளுக்கு அதிக விலை கிடைக்கும். ஒன்றிய அரசின் திட்டங்களில் மானியத்துடன் குளிர்சாதன கிடங்கு அமைக்க வழிவகை செய்யப்படும். இ.மார்க்கெட் மூலம் மஞ்சளை சந்தைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்ட விரோத மஞ்சள் விற்பனை தடுக்கப்படும். இதன்மூலம், தரமான மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்கும். மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க ஆவன செய்கிறேன். ஒன்றிய அரசு, தமிழக அரசுக்கு குளிர் சாதன கிடங்கு அமைக்க ரூ.900 கோடி வழங்கியுள்ளது. மஞ்சள் விவசாயத்துக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பது உணர்கிறேன். இப்பிரச்னையை தீர்க்க புதிய, மேம்பாட்டு பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியில் மஞ்சள் வயலை ஒன்றிய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் பார்வையிட்டார்.

 

Related Stories: