- சென்னை
- சிவகார்த்திகேயன்
- சுதா கொங்கரா
- ஜி. விபிரகாஷ் குமார்
- ரவிமோகன்
- அதர்வா முரளி
- ஸ்ரீ லீலா
- சேதன்
- டான் பிக்சர்ஸ்...
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 25வது படம், ‘பராசக்தி’. இது ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் 100வது படம். வில்லனாக ரவி மோகன் நடிக்க, முக்கிய கேரக்டர்களில் அதர்வா முரளி, ஸ்ரீலீலா, சேத்தன் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் இன்பன் உதயநிதி உலகம் முழுவதும் வெளியிடுகிறார். வரும் 10ம் தேதி திரைக்கு வரும் இப்படத்துக்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதில் இடம்பெற்ற வசனங்கள் மிகவும் கூர்மையாகவும், ஜனரஞ்சகமாகவும் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
டிரைலரில் இடம்பெறும் ஒரு காட்சியில், ‘நாங்கள் இந்தி திணிப்புக்குத்தான் எதிரானவர்கள். இந்திக்கும், இந்தி பேசுபவர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல’ என்ற வசனம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும், ‘தில்லிதான் இந்தியாவா? செந்தமிழைக் காக்க பெரும் சேனை ஒன்று உண்டு’ என்ற வசனமும் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 1964ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. மொழித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் டிரைலரில் இடம்பெற்றுள்ளன. பின்னணி இசை வலுவாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.
ஸ்ரீலீலா, அதர்வா முரளியுடனான இந்தி எதிர்ப்பு போராட்டம், இடையிடையே இந்தி பேசும் பெண்ணுடனான சிவகார்த்திகேயனின் காதல், ரவி மோகனின் வில்லத்தனம் என்று, ‘பராசக்தி’ படத்தின் காட்சிகளும், வசனங்களும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் இடம்பெற்றுள்ளன. இப்படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இசை வெளியீட்டு விழா கடந்த 3ம் தேதி நடந்தது. டிரைலரில், இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் சிவகார்த்திகேயன், ரவி மோகன் ஆகியோர் எதிரெதிர் அணியில் நின்று மோதியுள்ளனர். டிரைலரில் வெளியாகியுள்ள வசனங்கள் அனைத்தும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இதில் அறிஞர் அண்ணா பேசிய வரலாற்று சிறப்புமிக்க வசனங்கள் இடம்பெற்றுள்ளன. அவை ரசிகர்களால் சோஷியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. அண்ணா கதாபாத்திரத்தில் சேத்தன் சிறப்பாக நடித்துள்ளார். அவர், ‘இதற்குப் பின்னால் நாங்கள் இல்லை. ஆனால், இதை பண்ணுனவன் யாரா இருந்தாலும் அவன் என் தம்பி’ என்று பேசியுள்ள வசனம் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
