×

ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு: திருப்பூரில் வீடு வீடாக டோக்கன் விநியோகம் துவக்கம்

 

திருப்பூர்: தமிழ்நாடு முழுவதும் ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த வாரம் முதல் ரேசன் கார்டுதாரர்களுக்கு வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் கடை பணியாளர்கள் பொதுமக்களுக்கு விடுமுறை நாளான நேற்று வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்தனர். டோக்கன்களில் கடையின் பெயர், குடும்ப அட்டைதாரர் பெயர், குடும்ப அட்டை எண், டோக்கன் எண் மற்றும் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் உரிய நேரத்தில் சென்று பொங்கல் பரிசு தொகுப்புகளை வாங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரேஷன்கார்டு தாரர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் முன்னதாகவே டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் எந்தவித கூட்ட நெரிசலும் இல்லாமல் பொங்கலுக்கு முன்னதாகவே டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் தங்கள் பொங்கல் பரிசு தொகுப்புகளை ரொக்க பரிசுடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நேற்று வீடுகள்தோறும் சென்று பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்பட்டது. நேற்று ரொக்க பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் நாட்களில் ரொக்க பரிசு தொகையும் வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என ரேஷன் கடை பணியாளர்கள் தெரிவித்தனர்.

Tags : Pongal ,Tiruppur ,Tamil Nadu ,Pongal festival ,Rayson ,
× RELATED மேட்டூர் அணையின் நீர் மட்டம் 442...