×

இந்தூர் சோகம் மனிதரால் உருவாக்கப்பட்ட பேரழிவு பாஜவின் ஊழல் முழு அமைப்பையும் அழித்து விட்டது: தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் குற்றச்சாட்டு

 

இந்தூர்: “பாஜ ஆட்சியில் அனைத்து அமைப்புகளையும் ஊழல் அழித்து விட்டது” என தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் குற்றம்சாட்டி உள்ளார். மத்தியபிரதேசத்தில் டாக்டர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜ ஆட்சி செய்து வருகிறது. தேசிய அளவில் தூய்மையான நகரங்கள் பட்டியலில், மத்தியபிரதேச நகரான இந்தூர் தொடர்ந்து 8வது முறையாக தூய்மை நகரம் விருதை கடந்தாண்டு வென்றது. இந்த சூழலில் இந்தூரின் பகீரத்புரா பகுதியில் மாநகராட்சி மூலம் விநியோகம் செய்யப்பட்ட மாசடைந்த குடிநீர் காரணமாக வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டு 15 பேர் பலியாகி விட்டனர். இதனால் மாநகராட்சி விநியோகிக்கும் தண்ணீரை வாங்க அச்சப்படும் மக்கள் காசு கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தூர் விவகாரம் மனிதனால் ஏற்பட்ட பேரழிவு என தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேட்டி அளித்த ராஜேந்திர சிங், “இந்தூர் தண்ணீர் மாசுபாடு என்பது இயற்கையாக அல்லாமல், மனிதர்களின் அலட்சிய செயல்பாடுகளால் ஏற்பட்ட பேரழிவு. பணத்தை மிச்சப்படுத்த, ஒப்பந்ததாரர்கள் குடிநீர் குழாய்களை கழிவு நீர் வடிகால் பாதைகளுக்கு அருகில் போடுகிறார்கள். இந்த ஊழல் அமைப்பின் விளைவுதான் இந்தூர் சோகம். மாநில ஆட்சியில் ஊழல் அனைத்து அமைப்புகளையும் அழித்து விட்டது. நாட்டின் தூய்மையான நகரத்திலேயே இதுபோன்ற அவலம் இருந்தால், மற்ற நகரங்களில் குடிநீர் விநியோக அமைப்புகளின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங், “இந்தூரில் ஆண்டுக்கு ஆண்டு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவது கவலை அளிக்கிறது. நான் 1992ம் ஆண்டு இந்தூருக்கு சென்றபோதே, இந்த நகரம் எவ்வளவு காலத்துக்கு நர்மதா நதி நீரை நம்பியே இருக்கும் என கேட்டிருந்தேன். ஆனால், பல ஆண்டுகளுக்கு பிறகும் நர்மதா நீரை நம்பியே இந்தூர் மக்கள் வாழும் சூழலில், அரசு அமைப்பில் உள்ளவர்கள் பொறுப்பான நீர் மேலாண்மை அமைப்பை உருவாக்க விரும்பவில்லை. 80 கிமீ தூரத்தில் உள்ள இந்தூருக்கு நர்மதா நீரை கொண்டு வருவதில் ஊழல் நடந்துள்ளதன் மூலம் பெரும் தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டினார்.

 

Tags : Indore ,BJP ,Rajendra Singh ,Madhya Pradesh ,Dr. ,Mohan Yadav ,
× RELATED சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை...