×

திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ: இன்ஜின் எரிந்து நாசம்: 500 பைக்குகள் கருகின

 

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் இருச்சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நேற்று காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 500க்கும் மேற்பட்ட பைக்குகள் எரிந்து நாசமாயின. கேரள மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தின் 2வது நுழைவாயில் அருகே இருச்சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் இங்கு வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வார்கள். 2வது நடை மேடையில் தண்டவாளத்தின் அருகே ரயில்வே லைனுக்கு கீழே பிளாஸ்டிக் தார்ப்பாய் போட்டு அதற்கு கீழே வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.

இந்தநிலையில் நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் இங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 பைக்குகளில் திடீரென தீ பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மற்ற வாகனங்களிலும் தீ பரவத் தொடங்கியது. அப்போது 2 பைக்குகளின் பெட்ரோல் டேங்குகள் வெடித்துச் சிதறின. இதனால் அதிர்ச்சி அடைந்த ஒரு பெண் ஊழியர் உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார்.எனினும் தீ கொளுந்து விட்டு எரிந்தது. அருகில் நிறுத்தப்பட்டு இருந்த ரயில் இன்ஜினிலும் தீப்பிடித்தது.

இதுகுறித்து திருச்சூர் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 500க்கும் மேற்பட்ட இருச்சக்கர வாகனங்கள் எரிந்து சாம்பலாகின. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குறைவான வாகனங்களே நிறுத்தப்பட்டு இருந்தன என்றும், மற்ற நாட்களில் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் அங்கிருந்த ஊழியர் தெரிவித்தார்.
ரயில்வே லைனில் இருந்து தீப்பொறி பிளாஸ்டிக் தார்ப்பாயில் விழுந்து தீ பிடித்தது தான் இந்த விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

 

Tags : Thrissur railway station ,Thiruvananthapuram ,Kerala ,Kerala… ,
× RELATED சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை...