×

சபரிமலையில் கூடுதல் தங்கம் திருடப்பட்டுள்ளது: சிறப்பு புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல்

திருவனந்தபுரம்: சபரிமலையில் இருந்து மேலும் கூடுதல் தங்கம் திருடப்பட்டுள்ளது என்று கொல்லம் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சபரிமலையில் இருந்து தங்கம் திருடப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இதுவரை திருவிதாங்கூர் தேவசம் போர்டின் 2 முன்னாள் தலைவர்கள், தேவசம் போர்டு முன்னாள் அதிகாரிகள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் இடைத்தரகராக செயல்பட்ட திருவனந்தபுரத்தை சேர்ந்த உண்ணிகிருஷ்ணன் போத்தி தான் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவர்தான் இந்த மோசடியில் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்று போலீசார் கூறுகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட உண்ணிகிருஷ்ணன் போத்தி, கர்நாடக நகைக்கடை அதிபர் கோவர்தன், சென்னை அம்பத்தூர் நிறுவன தலைமை அதிகாரி பங்கஜ் பண்டாரி ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிறப்பு புலனாய்வுக் குழு சார்பில் நேற்று கொல்லம் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறியிருப்பது: சபரிமலையில் இருந்து திருடப்பட்ட தங்கத்திலிருந்து குறைந்த அளவு தான் மீட்கப்பட்டுள்ளது. பங்கஜ் பண்டாரி 109.243 கிராம் தங்கத்தையும், கோவர்தன் 474.960 கிராம் தங்கத்தையும் ஒப்படைத்துள்ளனர். ஆனால் இதைவிட அதிக எடையில் தங்கம் திருடப்பட்டுள்ளது.

இவர்கள் ஒப்படைத்த தங்கம் சபரிமலையில் இருந்து திருடப்பட்டது தானா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பாக கூடுதலாக விசாரணை நடத்த வேண்டும். எனவே உண்ணிகிருஷ்ணன் போத்தி, கோவர்தன் மற்றும் பங்கஜ் பண்டாரியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* தங்க திருட்டு வழக்கில் சிக்கியவர் சோனியாவை சந்தித்தது ஏன்? கேரள முதல்வர் கேள்வி
சபரிமலை தங்கம் திருடிய வழக்கில் நேற்று கேரள முதல்வர் பினராய் விஜயன் சமீபத்தில் வெளியான புகைப்படத்தை பற்றி கூறுகையில்,’ தங்கத்தைத் திருடியதாகக் கூறப்படும் ஒருவரும், அதை வாங்கிய மற்றொருவரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எப்படி சந்தித்தார்கள். அந்த படத்தில் சோனியா காந்தியுடன் இரண்டு பேர் இருக்கும் ஒரு புகைப்படம் உள்ளது.

ஒருவர் அடூர் பிரகாஷ் மற்றும் பத்தனம்திட்டா எம்.பி ஆண்டோ ஆண்டனி. சோனியா காந்தியுடன் நிற்கும் மற்ற இரண்டு பேர் யார்?. அவர்களில் ஒருவர் சபரிமலை தங்க வழக்கில் முக்கியக் குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் போத்தி. அவர் தனியாகச் செல்லவில்லை. மற்றொருவர் சபரிமலையில் திருடப்பட்ட தங்கத்தை வாங்கியவர். பலத்த பாதுகாப்பு கொண்ட சோனியா காந்தி போன்ற ஒரு தலைவரை இந்த இரண்டு பேரும் எப்படி சந்திக்க முடிந்தது?.

இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்ததில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை என்று பிரகாஷ் மறுத்துள்ளார். சந்திப்புக்கு அழைக்கப்பட்டதால் அங்கு சென்றதாக அவர் கூறுகிறார். அழைக்கப்பட்டால் மட்டும் எங்கு வேண்டுமானாலும் செல்வது சரியா?. குற்றவாளியும், காங்கிரஸ் தலைவர்களும், சோனியா காந்தியை எப்படி சந்தித்தார்கள் என்பதை பிரகாஷ் முதலில் விளக்க வேண்டும். இந்த மோசடிக்காரர்கள் சோனியா காந்தியை சந்திக்க உதவுவதில் அவர்களின் பங்கு என்ன?

அதற்கு யார் பொறுப்பு? முதல்வர் அலுவலகத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்குப் பதிலாக, இந்த கேள்வி முதலில் தெளிவுபடுத்தப்பட வேண்டும். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவைப்படும் எந்த ஒரு சூழ்நிலையும் ஏற்படவில்லை. விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது, மேலும் தேவைப்படும் யாரையும் விசாரிக்கும் உரிமை சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு உள்ளது’ என்றார்.

Tags : Sabarimala ,Special Investigation Team ,SIT ,Thiruvananthapuram ,Kollam ,Travancore Devaswom Board ,
× RELATED இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை...