இந்தூர்: மத்தியபிரதேசத்தில் மாசடைந்த குடிநீர் குடித்து 8 பேர் பலியான விவகாரத்தில் பா.ஜ அமைச்சர் விஜய்வர்கியா சர்ச்சையில் சிக்கினார். மத்தியப்பிரதேசத்தில் மாசடைந்த குடிநீரை பருகிய பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். அந்த பகுதி மபியில் சர்ச்சைக்குரிய முறையில் தொடர்ந்து பேசி வரும் அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியாவின் சொந்த தொகுதி ஆகும்.
மத்தியபிரதேச அமைச்சரவையில் நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் போன்ற முக்கியத் துறைகளைக் கையாளும் விஜயவர்கியா, அவர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட இந்தூர்-1 சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகீரத்புரா பகுதியில் குடிநீர் மாசுபாட்டால் ஏற்பட்ட வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு பரவல் குறித்து நேற்று விளக்கம் அளித்தார்.
அப்போது செய்தியாளரிடம் ஆரம்பத்தில் அமைதியாகவே கேள்விகளுக்குப் பதிலளித்தார். இருப்பினும், தனியார் மருத்துவமனைகளுக்குச் செலுத்திய கட்டணங்கள் இன்னும் ஏன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவில்லை, அப்பகுதியில் ஏன் சுத்தமான குடிநீர் ஏற்பாடுகள் இன்னும் செய்யப்படவில்லை என்று கேட்ட போது விஜய்வர்கியா கோபமடைந்தார்.
அவர்,’ பயனற்ற கேள்வியைக் கேட்காதீர்கள்’ என்று எாிச்சலாக பதில் அளித்தார். இருப்பினும், அந்த நிருபர் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் அதிருப்தி அடைந்த அமைச்சர் விஜய்வர்கியா ஒரு இழிவான வார்த்தையைப் பயன்படுத்தினார். சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், அந்த அமைச்சர் நிருபரின் கேள்வியைப் புறக்கணிக்கும் விதமாக அந்த வார்த்தையை கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நிருபர், ‘அமைச்சர் தனது பேச்சில் கவனமாக இருக்க வேண்டும்’ என்றார்.
அந்த வீடியோ வைரலானதால் அமைச்சர் விஜயவர்கியா வருத்தம் தெரிவித்து சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்தத் தரக்குறைவான கருத்து குறித்து கருத்து தெரிவித்த மபி காங். தலைவர் ஜிது பட்வாரி, ‘பாஜ அமைச்சர் விஜய்வர்கியாவின் அகங்காரம் மற்றும் உணர்வற்ற தன்மையை இது காட்டுகிறது. அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.
