சண்டிகர்: பஞ்சாப்பை சேர்ந்த 21 வயது பெண், தனது 3 மாத கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது உடல்நிலையை பரிசோதிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதில் கருக்கலைப்பதில் அந்த பெண் முழு உடல் தகுதியுடன் உள்ளதாக டாக்டர்கள் கூறி உள்ளனர்.
இந்நிலையில், வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சுவிர் சேகல் தலைமையிலான அமர்வு, ‘‘மருத்துவ ரீதியான கருக்கலைப்பு சட்டம் 1971ல், கருக்கலைப்புக்கு கணவரின் வெளிப்படையான அல்லது மறைமுகமான சம்மதம் தேவை என கூறப்படவில்லை. எனவே, திருமணமான பெண் தன் கர்ப்பத்தை தொடர வேண்டுமா அல்லது கருக்கலைப்பு செய்ய வேண்டுமா என சுயமாக முடிவெடுக்கலாம். அவருடைய விருப்பமும் சம்மதமும் மட்டுமே முக்கியம்’’ என உத்தரவிட்டுள்ளது.
