- திருப்பூர்
- குமரன் நினைவுச்சின்னம்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- மார்க்சிஸ்ட்
- முன்னாள்
- இடுவாய் பஞ்சாயத்து
- ஜனாதிபதி
- கணேசன்
திருப்பூர், ஜன. 1: குப்பை பிரச்னைக்கு தீர்வுகாண வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று திருப்பூர் குமரன் நினைவகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தலைமை வகித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், ஏஐடியுசி தேசிய குழு உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மார்க்சிய கம்யூ. கட்சி மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட செயலாளர் மூர்த்தி, இ.கம்யூ மாநில துணைச் செயலாளர் ரவி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும், தேங்கி கிடக்கும், துர்நாற்றம் வீசும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும், மக்களுக்கு தொற்றுநோய் பரவும் முன்பு சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், போராடிய மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.
