மதுக்கரை: மதுக்கரையில் நீதிமன்ற அலுவலக அறையின் பூட்டை உடைத்து கோப்புகளை கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்ட நீதிமன்ற ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கோவை மதுக்கரை தாலுகா அலுவலக வளாகத்தில், மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.
இந்த நீதிமன்றத்தில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள், நீதிமன்றத்தின் மேல் மாடியில் உள்ள அறையின் பூட்டை உடைத்து, அங்குள்ள நீதிமன்ற கோப்புகளை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த மதுக்கரை போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நீதிமன்ற கோப்புகளை பாதுகாப்பாக வைத்திருக்காமல், கொள்ளை போகும் வகையில் அஜாக்கிரதையாக செயல்பட்ட நீதிமன்ற தலைமை எழுத்தர் சந்தியா, அலுவலக உதவியாளர் சுபாஷ் ஆகியோர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
