சென்னை: அனைத்து மின்சார வாகனங்களுக்கான சாலை வரியை இரண்டு ஆண்டுகள் நீட்டித்து போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையினால் கடுமையான காற்றுமாசு ஏற்படுவதால், மின்சார வாகனங்களை வாங்குவோரை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது.
பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலையுடன் ஒப்பிடும் போது மின்சார வாகனங்களின் விலை அதிகமாக உள்ளது. இதனால் மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு மக்களிடையே ஆர்வம் குறைவாக இருந்து வருகின்றன. இந்நிலையில் மக்களிடையே மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க ஒன்றிய அரசு பல்வேறு வகையான மானியம் உள்பட சிறப்பு சலுகைகளை வழங்கியது.
அதேபோல தமிழக அரசும் கடந்த 2023ம் ஆண்டு மின்சார வாகனங்கள் வாங்குபவர்களுக்கு 100 சதவீத வரி விலக்கு வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி, 2025ம் ஆண்டு டிச.31ம் தேதி வரை சாலை வரி, பதிவுக்கட்டணத்தில் இருந்து மின் வாகனங்களுக்கு முழு விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் மின் வாகனங்களுக்கான சலுகைகளை மேலும் 2 ஆண்டுகளுக்கு, அதாவது 2027ம் ஆண்டு டிச.31ம் தேதி வரை நீட்டித்து போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
