சென்னை: தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜனவரி 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நம்நாட்டில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனங்களில் (நிப்ட்) இளநிலை, முதுநிலை மற்றும் பிஎச்டி படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம்.
அந்தவகையில் 2026ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான நிப்ட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 8ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த டிசம்பர் 8ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர்கள் பலர் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கான கால அவகாசம் வரும் ஜனவரி 6ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நிப்ட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜனவரி 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தாமத கட்டணத்துடன் ஜனவரி 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் https://exams.nta.nic.in/niftee/ என்ற இணையதளத்தில் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய ஜனவரி 18, 19ம் தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை http://www.nta.ac.in/ எனும் வலைத் தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம் என என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
