- சென்னை விமான நிலையம்
- சென்னை
- ஏடிஆர்
- தூத்துக்குடி
- சேலம்
- விஜயவாடா
- ராஜமந்திரி
- கடப்பா
- கோழிக்கோடு
- மங்களூர்
- மைசூர்
- யாழ்ப்பாண
- இலங்கை
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, சேலம், விஜயவாடா, ராஜமுந்திரி, கடப்பா, கோழிக்கோடு, மங்களூரு, மைசூர் மற்றும் இலங்கையின் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கு ஏடிஆர் எனப்படும் சிறிய ரக விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களுக்கு ஏரோ பிரிட்ஜ் வசதிகள் இல்லை. இதன் காரணமாக, இந்த விமானங்கள் சென்னை விமான நிலையத்தின் ஒதுக்குப்புறமான ரிமோட் ஃபே என்ற இடத்திலிருந்து புறப்படுகிறது.
அதேபோல், இந்த விமானங்கள் வெளியூர்களில் இருந்து வரும்போதும், ஏரோ பிரிட்ஜ் வசதிகள் இல்லாததால் ஒதுக்குப்புறமான ரிமோட் ஃபே பகுதியில் கொண்டு வந்து நிறுத்தப்படுகின்றன. அந்த விமானங்களில் வருகின்ற பயணிகள் விமானங்களில் இருந்து தற்காலிகமாக பொருத்தப்படும் படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்கி, அதன்பின்பு விமான நிறுவனத்தின் பிக்கப் வாகனங்களில் ஏற்றப்பட்டு, சென்னை விமான நிலையத்தின் வருகைப் பகுதிக்கு கொண்டு வந்து இறக்கி விடப்படுகின்றனர்.
இதனால் விமானம் சென்னையில் வந்து தரை இறங்கி, பயணிகள் வெளியில் வருவதற்கு சுமார் முக்கால் மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரையில் ஆகிவிடுகிறது. அதன் பின்பு பயணிகள் வெளியில் வந்து, வரிசையில் நின்று பேட்டரி வாகனத்தில் ஏறி, மல்டி லெவல் கார் பார்க்கிங் சென்று, இரண்டாவது தளத்தில் உள்ள பிக்கப் பாயிண்டில் வாகனங்களில் வீடுகளுக்கு புறப்பட்டுச் செல்வதற்கு, நீண்ட காலதாமதம் ஏற்படுகிறது.
ஏடிஆர் ரக விமானங்களில் வரும் பயணிகளுக்கு பயண நேரம் ஒரு மணி நேரம் என்றால் பயணிகள் விமானத்திலிருந்து இறங்கி வெளியில் வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது. அது மட்டுமின்றி, மழைக்காலங்கள், கடுமையான கோடை காலங்களில் பயணிகள் விமானங்களில் இருந்து தற்காலிக படிக்கட்டுகள் மூலம் இறங்கி, பிக்கப் வாகனங்களில் ஏறுவதற்கு பெரும் சிரமப்படுகின்றனர்.
அதேபோல், உள்நாட்டு முனையம் டெர்மினல் 4 புறப்பாடு பகுதியில் கேட் எண் 127, 128 ஆகிய பகுதியில் பயணிகள் உள்ளே செல்வதற்கு முன்பு காத்திருக்கும் போது, நீண்ட நேரம் நின்று கொண்டே நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அங்கு பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் எதுவும் இல்லை. இதனால் வயதானவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் நீண்ட நேரம் நின்று கொண்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் வருகை பகுதியில் லக்கேஜ்கள் எடுக்கும் கன்வேயர் பெல்ட் அருகில் டிராலிகள் நிறுத்துவதற்கு தனியாக இட வசதி இல்லை. மும்பை உள்ளிட்ட விமான நிலையங்களில் கன்வேயர் பெல்ட் அருகே டிராலிகளை நிறுத்துவதற்கு தனி இடம் ஒதுக்கி, அடையாளக் குறியீடு போட்டு வைத்துள்ளனர். அதுபோன்ற வசதி, சென்னை விமான நிலையத்தில் இல்லை.
இதுபோன்று சென்னை விமான நிலையத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து, பயணிகள் விமான நிலைய சமூக வலைதளத்தில் சரமாரியாக குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். இதுபோன்ற அவல நிலை ஏன் என்று சரமாரியாக கேள்விகள் எழுப்பி உள்ளார்கள். இதற்கு சமூக வலைதளத்தில் இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ள பதிலில், ஏடிஆர் ரக விமானங்களுக்கு பொருத்தக்கூடிய ஏரோ பிரிட்ஜ்கள் சென்னை விமான நிலையத்தில் இல்லை. எனவே ஏடிஆர் ரக விமானங்களுக்கு ஏரோ பிரிட்ஜ் பொருத்த முடியாது.
எனவே பயணிகள் தற்காலிக படிக்கட்டுகள் வழியாக தான் இறங்க வேண்டும். அதே நேரத்தில் பயணிகளின் பிக்கப் வாகனங்கள் தாமதம் இல்லாமல் இயக்குவதற்கு அறிவுறுத்தப்படும். அதோடு பயணிகள் அமர்வதற்கு கூடுதல் இருக்கைகள் அமைப்பது, டிராலிகள் நிறுத்தும் இடங்களில், அடையாள குறியீடுகள் போடுவது போன்றவைகள் பரிசீலித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
