சென்னை : கிறிஸ்துமஸ்சை முன்னிட்டு நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடந்து வந்த வேளையில் சீர்குலைக்கும் வகையில் பாஜ ஆளும் பல மாநிலங்களில் தேவாலயங்கள் மீதும் கிறிஸ்தவ மக்கள் மீதும் இந்து அமைப்பு மதவாத கும்பல்கள் தாக்குதல்களை நடத்தின. ம.பி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் இச்சம்பவங்கள் அரங்கேறின.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த தாக்குதலை கண்டித்து வரும் 5ம் தேதி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு: ஜனவரி 5ம் தேதி சென்னையில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ மக்கள் மீது மதவெறிக் கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்து நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமின்றி அனைத்து சனநாயக சக்திகளும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
