- சீமான்
- திராவிட
- பெரியார்
- மதுரை
- மதுரை போலீஸ் கமிஷனர்
- ஈரோடு எஸ்பி
- திராவிட தமிழ்க் கட்சி
- சந்துரு
- மதுரை பொலிஸ்
- ஆணையாளர்
- லோகநாதன்
மதுரை: திராவிடத்தையும், பெரியாரையும் இழிவுபடுத்தி பேசி வரும் சீமான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை போலீஸ் கமிஷனர், ஈரோடு எஸ்.பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திராவிட தமிழர் கட்சியைச் சேர்ந்த சந்துரு, மதுரை ேபாலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் நேற்று அளித்த புகார் மனு: சென்னையில் கடந்த 11ம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.
அப்போது, பாட்டன் பாரதி கண்ட வந்தே மாதரம் என்ற தலைப்பில் பேசிய அவர், ‘பிராமண கடப்பாரையைக் கொண்டு பாழடைந்த திராவிட கோட்டையை இடிப்பேன்’ என பேசினார். அவரது பேச்சு சமூகத்தில் பதற்றம், சட்டம், ஒழுங்கு பிரச்னை உருவாக காரணமாக உள்ளது. தமிழ்நாட்டில் தமிழர்களின் நலனுக்காக கல்வி, பொருளாதாரம் மற்றும் இடஒதுக்கீடு கிடைத்திட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சாகும் வரை பிரசாரம் செய்து வந்தவர் தந்தை பெரியார்.
அவரைத் தொடர்ந்து இழிவுபடுத்துவதும், அவதூறாக பேசுவதும் சீமானின் தொடர் செயல்பாடாக உள்ளது.
திராவிடத்தை இழிவுபடுத்தும் விதமாகவும், பிற சமூகத்தினரிடையே வன்முறையை தூண்டும் வகையிலும் சீமானின் பேச்சு அமைந்துள்ளது. எனவே, இனம், பிறப்பிடம், மொழி, சாதி, சமூகம் அடிப்படையில் விரோதம் மற்றும் வெறுப்பு எண்ணங்களை தீய எண்ணத்தோடு தூண்டி வருவது பிஎன்எஸ் சட்டப்பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
எனவே, தமிழ்நாட்டில் பொதுமக்களிடையே பகைமை உணர்வை தூண்டி சமூகத்தில் நிலவும் அமைதியை சீர்குலைக்கும் எண்ணத்தோடு திராவிடத்தையும் பெரியாரையும் இழிவுபடுத்தி பேசி வரும் சீமான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதேபோல், திராவிடத் தமிழர் கட்சியின் மாநில இணை பொதுசெயலாயர் வேங்கை பொன்னுசாமி தலைமையில் கட்சியினர் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் சீமான் மீது புகார் மனு அளித்து உள்ளனர்.
