கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்துள்ள வடவயல் பகுதியை சேர்ந்தவர் குட்டன் (எ) குட்டி கிருஷ்ணன் (48), விவசாயி. இவரது மனைவி அஞ்சு (44). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இதில், ஒரு மகளுக்கு திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற 2 குழந்தைகள் வெளியூரில் படித்து வருகின்றனர். குட்டி கிருஷ்ணன், மனைவியுடன் தனியாக வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இவரது மனைவி, அருகில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று பகல் 12.30 மணி அளவில் உறவினர் ஒருவர், குட்டி கிருஷ்ணணின் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். குட்டி கிருஷ்ணன் போன் எடுக்காததால் உறவினர், நேரடியாக வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த உறவினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குட்டி கிருஷ்ணன் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குட்டி கிருஷ்ணனின் தந்தை இறந்து 12 நாட்களே ஆகியுள்ள நிலையில் குட்டி கிருஷ்ணனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
