பல்லடம்: தமிழகம் முழுவதும் கறிக்கோழி உற்பத்தி இன்று முதல் நிறுத்தப்படுவதாக கறிக்கோழி பண்ணை வளர்ப்பு விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சிக்கன் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின், கறிக்கோழி பண்ணை வளர்ப்பு விவசாயிகள் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் கூறியதாவது: கறிக்கோழிக்கு, வளர்ப்பு கூலியாக தற்போது கிலோவிற்கு ரூ.15 வரை வழங்கப்படுகிறது.
இதனை உயர்த்தி கிலோவுக்கு, 20 ரூபாயும், நாட்டுக்கோழிகளுக்கு, ரூ.25 மற்றும் காடை கோழிகளுக்கு 7 ரூபாயாகவும் வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். கறிக்கோழி பண்ணை வளர்ப்பு விவசாயிகளின், 10 அம்ச கோரிக்கையையும் நிறைவேற்றுவதற்காக, முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கால்நடைத் துறை இயக்குனர் தலைமையில் ஆலோசனை நடந்தது.
அதில், 10 அம்ச கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏற்கனவே, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளன. ஜனவரி 1ம் தேதி தமிழகம் முழுவதும், முழுமையான உற்பத்தி நிறுத்த போராட்டம் நடக்கும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை, இனி கறிக்கோழி பண்ணை வளர்ப்பு விவசாயிகள், கோழிக்குஞ்சுகளை வாங்க மாட்டார்கள்.
உற்பத்தி நிறுவனங்கள் கறிக்கோழி பண்ணை வளர்ப்பு விவசாயிகளுடன் முத்தரப்பு பேச்சு நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். சபரிமலை சீசன் முடிவடையவுள்ள நிலையில், இனி மேல்தான், கறிக்கோழி விற்பனை அதிகரிக்க துவங்கும் நிலையில், கறிக்கோழி பண்ணை வளர்ப்பு விவசாயிகளின் போராட்டத்தால், கோழி உற்பத்தி தடைபடுவதுடன், தட்டுப்பாடு காரணமாக, கோழிகளின் விலை உயரவும் வாய்ப்பு உள்ளது.
* கேரளாவில் இருந்து நீலகிரிக்கு கோழிகள் ஏற்றி வர தடை
கேரள மாநிலம் கோட்டயம், ஆழப்புழா உள்ளிட்ட பகுதிகளில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால், தமிழகத்திற்குள் வராமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கேரளாவையொட்டி உள்ள மாவட்டங்களான நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை சாவடிகளில் அமைக்கப்பட்டு கால்நடைத்துறையினர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், அங்கிருந்து கோழி, கோழி தீவன முட்டை போன்றவற்றை ஏற்றி வரும் வாகனங்கள் நீலகிரிக்குள் வர தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்ட எல்லை மாநிலமான கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
