வத்திராயிருப்பு அருகே காட்டு யானைகளால் தென்னை, வாழை சேதம்: சோலார் வேலி அமைக்க விவசாயிகள் வேண்டுகோள்

வத்திராயிருப்பு, ஜன. 22: வத்திராயிருப்பு அருகே கான்சாபுரத்தை அடுத்துள்ள அத்திக்கோயில் நடுக்காட்டு பகுதியில் தென்னை, வாழை ேதாப்புகள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தையொட்டி இந்த விவசாயம் நடைபெறுவதால் காட்டுயானைகள் அவ்வப்போது தோப்புக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் கான்சாபுரத்தைச் சேர்ந்த 2 விவசாயிகளின் தோட்டங்களுக்குள் புகுந்த காட்டுயானைகள் மூன்று வருட தென்னை மரங்கள் 7, வாழை மரங்கள் 50 ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளன.

தற்போது மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பெய்து தண்ணீர் இருந்தும்,  அடிவாரப் பகுதியில் உள்ள தோட்டங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவது விவசாயிகள் மத்தியில் அச்சத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், காட்டுயானைகளால் தோட்டங்களில் உள்ள மரங்கள் தொடர்ந்து சேதப்பட்டு வருகிறது. ஆயினும் சேதப்படுத்தபட்ட மரங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காத நிலை இருந்து வருகிறது. காட்டுயானைகள் மற்றும் வனவிலங்குகள் மலையடிவாரப் பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு வராமல் தடுப்பதற்கு தடுப்பு சோலார்  வேலியை அரசு அமைத்து தர வேண்டும்.

இந்தப் பகுதியில் காட்டுயானைகள் அடிக்கடி சேதத்தை ஏற்படுத்தி வருவதால் வனத்துறையினர் இரவு நேரம் தீவிர ரோந்து பணியைச் செய்ய வேண்டும். அதோடு விவசாயிகளுக்கு தேவையான டார்ச் லைட் மற்றும் பட்டாசுகள் கொடுக்க வேண்டும். மேலும் இந்த பகுதியில் நிரந்தரமாக வனத்துறையினர் முகாமிட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகளை வராவிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட பகுதிகளை வனத்துறையினர் பார்வையிட்டு உரிய நிவாரணம் விரைந்து கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.

Related Stories:

>