×

பிரதமர் மோடியின் தமிழ் வேடம் தமிழக தேர்தல்களில் எடுபடாது: பொன்குமார் தாக்கு

சென்னை: பிரதமர் மோடியின் தமிழ் வேடம் தமிழக தேர்தல்களில் எடுபடாது என்று பொன்குமார் கூறியுள்ளார்.

தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசிய பொழுது, தமிழ்மொழியை உலக அளவில் உள்ள இளைய தலைமுறைகளிடம் எடுத்து செல்வதற்கான உரிய நடைமுறைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். குறிப்பாக, தான் பிஜி நாட்டிற்கு சென்ற பொழுது அங்கு தமிழ்மொழி கற்பிக்கப்படுவதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து பாராட்டுதலை தெரிவித்துள்ளார். இப்படி கூறிய பிரதமர் மோடி தமிழ்மொழியான செம்மொழியை வளர்ப்பதற்கு தமிழ் மொழிக்கு ஒதுக்கிய நிதி, எடுக்கப்பட்ட நடவடிக்கை இவைகள் குறித்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. மக்களால் பேசப்படாத சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கியதில் 5% கூட கோடிக்கணக்கான மக்களால் பேசக்கூடிய உலகின் மூத்த மொழியான செம்மொழிக்கு இதுவரை ஒன்றிய அரசு ஒதுக்காமல் துரோகம் செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வருவதால் மோடிக்கு தமிழ் மீது அபரிதமான அக்கறை. இந்த இரட்டை வேடத்தை மக்கள் புரிந்துகொள்வார்கள். உங்கள் தமிழ் வேடம் 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் ஒருபோதும் எடுபடாது. மக்கள் தெளிவான முடிவெடுத்து விட்டார்கள். தமிழ்நாட்டுக்காக அல்லும், பகலும் அயராது உழைத்து, அனைத்து நிலைகளிலும் தமிழ்நாட்டை முதல் நிலைக்கு கொண்டு வந்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்க தமிழ்நாட்டு மக்கள் எப்போதோ முடிவெடுத்து விட்டார்கள். இனியும் போலி தமிழ்ப் புகழ் பாடுவதை தொடர வேண்டாம்.

Tags : PM Modi ,Bongumar ,Chennai ,Modi ,Tamil Nadu Farmers' Workers' Party ,Chairman Ponkumar ,
× RELATED திருப்பூரில் நடைபெற்று வரும் திமுக...