×

சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுக்க நாளை கடைசி

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று தொண்டர்கள் குவிந்தனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனுக்கள் கடந்த 10ம் தேதியிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் மாவட்ட கமிட்டி அலுவலகங்களிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்திலும் ஏராளமான காங்கிரசார் விருப்ப மனுக்களை வழங்கி வருகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்றும் ஏராளமானோர் தங்களது விருப்ப மனுக்களை வழங்கினர்.

விருப்ப மனுவை வழங்குவதற்கு டிசம்பர் 31ம் தேதி கடைசி நாள் (நாளை) என்பதால் இன்னும் 2 நாட்களே இருக்கும் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று காலை முதல் ஏராளமானோர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்பமனுக்களை அளித்தனர். அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் லெனின் பிரசாத், துறையூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். மாநில பொதுச்செயலாளர் தாம்பரம் நாராயணன்- தாம்பரம் தொகுதிக்கும், முன்னாள் எம்பி அருள் அன்பரசு-சோளிங்கர் தொகுதி, ஐஎன்டியுசி பொது செயலாளர் அமீர்கான்- கடையநல்லூர் தொகுதிக்கும் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்தனர்.

மேலும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் செல்லக்குமார் அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அவருடைய ஆதரவாளர்கள் பி.வி.தமிழ்ச்செல்வன், நரசிம்மன், தண்டபாணி, அலெக்ஸ் உள்ளிட்டோர் விருப்ப மனுக்களை அளித்தனர். அவர்களிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மனுக்களை பெற்று கொண்டார். இதனால் நேற்று காலை முதலே காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Tags : Congress party ,Chennai ,Congress ,Sathyamurthy Bhavan ,Tamil Nadu ,
× RELATED பா.ஜ.வின் குரலாக பேசி வருவதை ஏற்க...