×

போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு ஆயுட்கால சான்றிதழை சமர்ப்பிக்க 3 மாதம் அவகாசம்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னை: போக்குவரத்து ஓய்வூதியதாரர்கள் ஆயுட்கால சான்றிதழை சமர்ப்பிக்க 3 மாத காலம் அவகாசம் வழங்கப்படுவதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநகர் போக்குவரத்து கழகத்தில் 15,300-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்றுள்ளோர்களுக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதிய நிதியின் வாயிலாக, ஓய்வூதியமானது வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுட்காலச் சான்றிதழை ஏற்கனவே, நடைமுறையில் உள்ளவாறு தாங்கள் கடைசியாக பணியாற்றி, ஓய்வு பெற்ற அலுவலகம் / பணிமனையிலேயே சமர்ப்பித்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஓய்வூதியதாரர்கள் எதிர்வரும் 2026ம் ஆண்டிற்கான ஆயுட்காலச் சான்றிதழை, வரும் ஜனவரி 1ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதிக்குள்ளாக, அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்க வரும்பொழுது, ஓய்வூதிய உத்தரவு ஆணை எடுத்து வருமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. அதன்படி, தலைமை நிதி அலுவலர், தலைமையகம் , மாதவரம் பணிமனை, கோயம்பேடு பணிமனை, செம்மஞ்சேரி பணிமனை, பட்டுலாஸ்சாலை தொழிற்கூடம், மண்டல தொழிற்கூடம், கே.கே.நகர் பணிமனை, குரோம்பேட்டை-1 பணிமனை, அண்ணாநகர் கிழக்கு பணிமனை, மாதவரம் பணிமனை, அடையார் பணிமனை, கிளாம்பாக்கம் பணிமனை ஆகிய இடங்களில் ஆயூட் கால சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

மேலும், விடுபட்டவர்கள் தலைமையலுவலகத்தினை அணுகி, தங்களின் ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு 044-2345 5801-Extn.271 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள், தங்களது வீட்டிற்கு அருகாமையில் உள்ள இ-சேவை மையத்தில், TNS-103 என்னும் இணையதள முகப்பில், தங்களது ஆதார் அட்டை, புகைப்படம், ஓய்வூதிய உத்தரவு ஆணை, வங்கி புத்தகம் மற்றும் கைபேசி எண் பதிவு செய்யலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Transport Corporation ,Chennai ,Municipal Transport Corporation ,Tamil Nadu Government Transport Corporation ,
× RELATED கூட்டணி இன்னும் அமையாததால் விரக்தி...