×

வோளங்கண்ணி அருகே பரபரப்பு கடற்கரையில் ஒதுங்கிய அமெரிக்க ராக்கெட் உதிரிபாகம்: மீனவர்கள் அச்சம்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் கடற்கரையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எல்இடி லைட் ஒளிரும் ராக்கெட் உதிரிபாகம் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்களும் அச்சம் அடைந்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் காவல் சரகத்திற்குட்பட்ட பிரதாபராமபுரம் கடற்கரையில்,  நேற்று ராக்கெட் உதிரி பாகம் பொருள் கரை ஒதுங்கி இருப்பது குறித்து அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது 4 அடி நீளமுள்ள இந்த பொருள், இரண்டு பைபர் பைப்புகள் இணைக்கப்பட்ட அமைப்பில் இருந்தது. இதில், பெரிய பைப் 20 சென்டி மீட்டர் சுற்றளவும், சிறிய பைப் 15 சென்டி மீட்டர் சுற்றளவும் கொண்ட நிலையில் இருந்தது. இரண்டு பைப்புகளும் அரை அடி உயரத்தில் ஏற்ற இறக்கமாக இணைக்கப்பட்டு, நடுவில் கம்பி பொருத்தப்பட்ட நிலையில் காணப்பட்டது.

பைப்பின் முன்பகுதி கூம்பு வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முனையில் சிறிய எல்இடி லைட் விட்டு விட்டு எரியும் வகையில் அமைந்துள்ளது. மேலும், பெரிய பைப்பில் சிறிய நைலான் குழாய் இணைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் கவனம் ஈர்க்கும் வகையில், பெரிய பைப்பின் பின்பகுதியில் ‘மேட் இன் யுஎஸ்ஏ’ என்று எழுதப்பட்டிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த கீழையூர் கடலோர காவல் குழும போலீசார், நாகப்பட்டினம் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வெடிகுண்டு கண்டு பிடிப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அதை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினர். பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ள நேரத்தில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் உதிரி பாகம் கடற்கரையோரம் கரை ஒதுக்கி இருப்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Velankanni ,Nagapattinam ,US ,Prathaparamapuram beach ,Keezhayur police station ,Nagapattinam district ,
× RELATED நிதிச்சுமை ஏற்பட்டாலும் நிறைய...