- மன்னார்குடி
- அமைச்சர்
- TRP
- ராஜா
- பூண்டி கலைவனன்
- சட்டமன்ற உறுப்பினர்
- முதல் அமைச்சர்
- சிவகுமார்-சுமதி
- நன்னிமங்கலம்
- திருவாரூர்
மன்னார்குடி: பெற்றோரை இழந்து தவிக்கும் 3 குழந்தைகளுக்கு வீட்டு மனை பட்டாவை அமைச்சர் டிஆர்பி ராஜா, பூண்டி கலைவாணன் எம்எல்ஏ ஆகியோர் வழங்கினர். அவர்களுக்கு முதலமைச்சர் வீடியோ காலில் ஆறுதல் கூறினார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த நன்னிமங்கலத்தை சேர்ந்தவர்கள் சிவக்குமார்-சுமதி. இவர்களது மகள்கள் சுவாதி, ஸ்வேதா, மகன் சிவேஸ்வர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சுமதி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
டெய்லரான சிவக்குமாரும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். இதனால் மூன்று குழந்தைகளும் ஆதரவற்று தவித்தனர். ஒழுகும் குடிசை வீட்டில் வசித்து வரும் இந்த குழந்தைகளுக்கு அக்கம்பக்கத்தினர் அவ்வப்போது தங்களால் முடிந்த உதவிகளை செய்து வந்தனர். இதில், சுவாதி, ஸ்வேதா கூத்தாநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு படித்து வருகின்றார். சிவேஸ்வர அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்களின் நிலை குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் மூலம் அறிந்த மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் உடனடியாக மூன்று குழந்தைகளையும் முதல்வரின் அன்புகரங்கள் திட்டத்தின் கீழ் சேர்த்து அவர்களின் 18 வயது வரை அவர்களுக்கு மாதம் ரூ2,000 வழங்க ஏற்பாடு செய்தார். அதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகதுறை அமைச்சர் டிஆர்பி ராஜா, எம்எல்ஏ பூண்டி கலைவாணன், மாவட்ட கலெக்டர் மோகனச் சந்திரன் ஆகியோர் நேற்று நன்னிமங்கலம் கிராமத்தில் உள்ள குழந்தைகளின் வீட்டுக்கு நேரில் சென்று அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கினர்.
வீடியோ காலில் ஆறுதல் கூறிய முதல்வர்…: ஆதரவற்ற குழந்தைகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ காலில் பேசினார். அப்போது, ‘தைரியமா இருங்கம்மா. எல்லாம் நாங்க பார்த்துக்குறோம். நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்.
தற்போது வீட்டுமனை பட்டா கொடுத்துள்ளேன். இன்னும் மூன்று மாதத்தில் கலைஞர் கனவு இல்லம் கட்டித் தருவேன். உங்களது மேற்படிப்பை அரசு ஏற்கும்’ எனக் கூறினார். முதல்வரின் ஆறுதலைக் கேட்டு நெகிழ்ந்து போன மூன்று குழந்தைகளும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
