திருச்சுழி, டிச.27: நரிக்குடி அருகே குடிநீர் வாகனம் சக்கரம் ஏறி இறங்கியதில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நரிக்குடி அருகே இருஞ்சியை சேர்ந்தவர் பஞ்சாட்சரம்(77). இவர் அதே ஊரில் உள்ள சிவன் கோவிலில் பூசாரியாக இருந்தார். கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கிராமத்திற்கு தண்ணீர் சப்ளை செய்யும் தனியார் குடிநீர் வாகனத்தை பின்புறமாக இயக்கும் போது சாலையில் நடந்து சென்ற பஞ்சாட்சரம் மீது மோதியது.
அவர் மீது வண்டி டயர் ஏறி இறங்கியதில் வலது கால் முறிந்து படுகாயம் அடைந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலமாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து கட்டனூர் போலீசார் விபத்து ஏற்படுத்திய நரிக்குடியை சேர்ந்த கார்த்திகைச்சாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
