கம்பம், டிச. 27: கம்பம் பத்திரபதிவு அலுவலகம் அருகே நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகம் பெரியாறு அணை சிறப்பு கோட்டம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பு பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கம்பத்தில் செயல்படும் பெரியாறு அணை சிறப்பு கோட்ட அலுவலகத்தை தேக்கடிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.
பெரியாறு அணைக்குள் நிலவும் முறைகேடுகளை கண்டித்தும் அதிகாரிகளின் சட்ட விதிமீறல்களை கண்டித்தும், அணை ரகசியங்களை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். கம்பம் தெற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
