கோவில்பட்டி அருகே பயிர் காப்பீடு வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி, டிச. 27: பயிர் காப்பீடு வழங்க கோரி கோவில்பட்டி அருகே மேலக்கரந்தை தேசிய நெடுஞ்சாலை விலக்கில் கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூத்த விவசாயிகள் சேதுராஜ், ராமசாமி தலைமை வகித்தனர். மேலநம்பிபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் தனவதி, அய்யாத்துரை, தமாகா வடக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால், திருப்பதி, ஆதிமூலம், நவநீதன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் ஓராண்டுக்கு பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் கொள்கை முடிவான 5 ஏக்கர் என்ற வரம்பை தளர்த்தி பாதிக்கப்பட்ட அனைத்து நிலங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். இருக்கன்குடி நீர்த்தேக்கத்தில் வைப்பாற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும். மு.கோட்டூர் விலக்கில் தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும். 2024 மற்றும் 2025ம் ஆண்டுக்குரிய பயிர் காப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும். உழவு, விதை மானியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களும் எழுப்பப்பட்டன. இதில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். மாசார்பட்டி ஆதிநாராயணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் செய்திருந்தார்.

Related Stories: