கண்டெய்னர் லாரியில் போலீசார் சோதனை

வடலூர், டிச. 27: கண்டெய்னர் லாரியில் பல கோடி கருப்பு பணம் கடத்தி வருவதாக வந்த தகவலையடுத்து வடலூர் போலீசார் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் வடலூர் போலீசாருக்கு, நபர் ஒருவர் போன் கால் செய்து கடலூரில் இருந்து வடலூரை நோக்கி கண்டெய்னர் ஒன்றில் பலகோடி ரூபாய் மதிப்பிலான கருப்பு பணத்தை கடத்தி வருகிறார்கள். அந்த கண்டெய்னர் தற்போது வடலூர் பகுதியில் சுற்றி வருகிறது. அதை உடனே பிடியுங்கள் என்று சொல்லிவிட்டு போனை கட் செய்து விட்டார். இதையடுத்து வடலூர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார், நான்கு முனை ரோடு சந்திப்பு, சத்திய ஞான சபை, ஆபத்தாரணபுரம், சிதம்பரம் செல்லும் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது நெய்வேலி சாலையில் வந்து கொண்டிருந்த கண்டெய்னரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அதில் கடலூரில் இருந்து கேரளாவிற்கு மீன் ஏற்றி செல்லும் கண்டெய்னர் என தெரியவந்தது. அதைதொடர்ந்து பெருவெளியில் சந்தேகத்திற்குரிய கண்டெய்னர் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதனையும் போலீசார் சோதனை செய்தபோது பணம் ஏதும் பிடிபடவில்லை. இதையடுத்து மர்மநபர் கூறியது பொய் என தெரியவந்தது. கருப்பு பணம் கடத்தி வருவதாக போன் பேசிய மர்ம நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த போன் கால் வந்ததால் இச்சம்பவம் வடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: